முந்தி இருப்பச் செயல்

பெற்றவர்கள் எல்லோருக்கும் வாழ்கையில் பெரிய கனவாக இருப்பது பிள்ளைகளின் எதிர்காலம்தான். பிள்ளைகள் எப்படி வளரவேண்டும் ,எப்படி வரவேண்டும் என்ற கனவுகளும்,திட்டங்களும் இல்லாத பொறுப்புள்ள பெற்றோர் யாருமில்லை .வாழ்க்கை சூழலில் இந்த கனவுகளுக்கும்,திட்டங்களுக்கும் நடைமுறை சிக்கல்களும் ஏமாற்றங்களும் வருவது ஒருபுறம். இந்த கனவுகளும் திட்டங்களும் சரியானதுதானா? நியாயமானதுதானா ? ஆதாரமாக சிந்திக்கவேண்டிய விடயம். இந்த கனவுகள் பொதுவாக பொருளாதார ரீதியாக வாழவைக்க என்ற அடிப்படையில் மட்டுமே இருக்கிறது. டாக்டராகவோ, பெரிய பொறியாளராகவோ , கணக்கு தனிக்கையாளராகவோ(Auditor), இந்திய நிர்வாக சேவை (IAS), இந்திய காவல் சேவை(IPS) போன்ற பதவிகள் வகிக்கவேண்டும் என்ற கனவுகளோடுதான் அநேகமாக பெற்றோர்கள் இருக்கிறார்கள் .இதற்காக பெற்றோர்கள் சந்திக்கும் தடைகளும் , விதிமீறல்களும் எத்தனை? கனவுகளை அடைய தகுதிக்கு மீறிய செலவுகளுக்கு கடன்வாங்கி வாழ்க்கை முழுவதும் கடனாளியாக வாழ்பவர்கள் எத்தனை பேர் ?இத்தனை செய்தும் அவர்கள் கனவுகள் முற்றுப்பெராமல் போனவர்கள் எத்தனை பேர்?
இந்த எலிப்பந்தயத்தில்(Rat Race) கூட்டத்தோடு பொதுப்புத்தி கொண்டு ஓடத்தொடங்குகிறோம். இந்த பந்தயத்தின் இலக்கு பதவி ,பணம் மட்டுமே. அதற்கு செலவிடும் காலம் வாழ்வில் பாதிக்கு மேல்.முடிவில் வெற்றி கிடைத்தாலும் ,கிடைக்காவிட்டாலும் ,எதிர்கொள்ளகாத்திருப்பது ஏமாற்றமும் விரக்தியும்தான்.
பிறகு கனவுகாண்பதிலும் திட்டமிடுதளிலும் செயலாக்குவதிலும் என்ன தவறு செய்கிறோம்?
இந்த கனவுகளில் உயரிய சரியான நோக்கமோ, வழிகாட்டலோ , செயல்முறையோ இல்லை என்பதுதான் உண்மை . கனவுகளே தவறாக இருக்கும்போது ,முடிவுகள் எப்படி சரியாக இருக்கும் ? கனவு காணச்சொல்லி அப்துல் கலாம் முதல் அனைவரும் சொல்கிறார்கள். மற்றும் சிலர் எல்லாவற்றிற்கும் ஆசைப்படு என்று சொல்கிறார்கள். கனவு காண்பதும், ஆசைப்படுவதும் தவறில்லை . ஆனால் இங்கே நாம் சிந்திக்கவேண்டியது நமக்கு இறைவன் அளித்த இந்த அழகிய வாழ்கையை எப்படி வாழ்வது என்பதுதான்
“எதை நாம் கொண்டுவந்தோம்,
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் 
அழகே பூமியில் 
வாழ்கையை அன்பில் வாழ்ந்து 
விடைபெறுவோம் ,
மாயாவி திரைப்படத்தில் கவிஞர் பழனி பாரதி எழுதிய இறைவன் தந்த அழகிய வாழ்வு என்ற பாடலின் மேற்கண்ட வரிகள்போல் வாழ்க்கையை அன்பில் வாழ்ந்து விடை பெறவேண்டும். அடிக்கடி நான் கேட்கும் இந்த பாடலின் கருத்து நம் கனவாகவும் நம் சந்ததிகளை பற்றிய கனவாகவும் அமைந்தால் ,அதுதான் நாம் பிறந்ததின் வெற்றி.
பல பெற்றோர்கள் முதுமைக்காலத்தை ,முதியோர் மையங்களிலும் ,தனிமையிலும் பிள்ளைகளால் குடும்ப வாழ்க்கை நிராகரிக்கப்பட்டு வாடுவதை பார்க்கிறோம்.கஷ்டப்பட்டு ஆளாக்கிய பிள்ளைகள் தான் கொண்ட கனவுகள் போல் அவர்களின் பிள்ளைகளுக்காக தூரத்தில் தங்களின் இளமையையும் சந்தோசத்தையும் தொலைத்துக்கொண்டு பணத்திற்காக எலி ஓட்டம் ஓடுவதை பார்க்கிறோம். தனக்கும் பெற்றோர்போல் முதுமை வரும் என்றும் பணத்தால் எல்லாம் வந்துவிடாது என்று உணரும்போது பெற்றோர்போல் தானும் தாமதப்பட்டது தெரியும்
பணத்தை கொண்டுமட்டும் அன்பு சந்தோசம் போன்ற மனிதநேயமான விடயங்கள் பெறமுடியாது என்பதை பிள்ளைகளுக்கு புரியவைக்கவேண்டும். பணம் நிச்சயம் வேண்டும் அதற்காக இளமையை ,சந்தோசத்தை ,அன்பை ,நேசத்தை , மனிதநேயத்தை தொலைத்துவிட்டு சம்பாதிக்கும் அந்த பணம் கண்ணை விற்று ஓவியம் வாங்கியதற்கு சமம் ,
1.வல்லவனாவதோடு, நல்லவனாகவேண்டும் என்று கனவு காணுங்கள் 
2.உங்கள் ஆசைகளை அவர்களிடம் திணிக்காதீர்கள்.அதற்குபதில் அவர்களின் நியாயமான ஆசைகளையும் , திட்டங்களையும் , ஆதரித்து வழிகாட்டுங்கள் ,
3.அவர்களின் கல்வி , வருங்காலகணவு திட்டங்கள் உங்களின் ஆசையோ ,அவர்களின் ஆசையோ முக்கியமில்லை.
ஏனெனில் 
உங்கள் அசைகள் பொருளாதாரம் ,அந்தஸ்து போன்றவற்றை பொறுத்ததாக இருக்கும் பிள்ளைகளின் ஆசை அவர்களின் சகநண்பர்கள்(Peer Group) தாக்கத்தில் இருக்கலாம். 
ஆகவே அவர்களுக்கு இயற்கையான திறமை எதில் இருக்கிறது என்று சிறு வயது முதல் கவனியுங்கள். அதில் ஆர்வம்கொள்ள உதவுங்கள் .சமூகத்தின் பொதுப்புத்தியில் அவை பெரிய முன்னேற்றமில்லாத துறைகளாக பேசப்படலாம் .எந்ததுறையாக இருந்தாலும் அதில் சிறந்து விளங்குவதுதான் முக்கியம். பள்ளிக்கல்லூரி படிப்பில் பின்தங்கியவர்கள் சாதனை செய்தவர்களை எத்தனைபேரை பார்த்திருக்கிறோம் .மதிப்பெண் மட்டும் தீர்மானிப்பதல்ல வாழ்க்கை .அவர்களின் இயற்கையான திறமை ,ஆர்வம் ,உங்கள் வழிகாட்டல் ,உங்கள் உதவி ஆகியவை இருந்தால் ஓரு இளையராஜாவாகவோ,A.R,ரஹ்மானாகவோ , சச்சின் டெண்டூல்கர், பில் கேட்ஸ் போலவோ வரமுடியும் . இவர்கள் கல்லூரிகளில் மெத்த படித்தவர்கள் இல்லை .குறிப்பிட்ட துறையில்தான் முன்னேறமுடியும் என்ற பொதுப்புத்தி வேண்டாம். கோடிகள் சம்பாதிக்கும் முடிதிருத்தும் சலூன்காரர் என் நண்பர் ,
4. IQ அதிகம் உள்ளவர்களை விட EQ அதிகம் உள்ளவர்கள் ,வெற்றியாளர்களாகவும் ,மகிழ்வானவர்களாகவும் இருக்கிறார்கள்.அதாவது புத்தி கூர்மையானவர்களைவிட ,தங்கள் உணர்வுகளை சரியாக பயன்படுத்துபவர்கள் வாழ்வில் வெற்றிபெறுகிறார்கள் ,
மேற்சொன்ன நான்கு செய்திகளையும் ஏற்று பிள்ளைகளை வளர்த்தால் பழனி பாரதி பாடியதுபோல் வாழ்கையை அன்பில் வாழ்ந்து வெற்றிகொள்ளலாம் .

Comments