மனிதம்

பப்பரப்புளிமரமும் பொன்னிக்குருவியும்.

                                                1
தமிழகம் முழுவதும் மழைபெய்யும் காலத்தில் இங்கு மழை பெய்யாது. டிசம்பர் கடைசியில்தான் சரியான மழைக்காலம் ஆரம்பிக்கும். சில பத்தாண்டு இடைவெளியில் பிரளயம் போன்ற பெருமழை புயலுடன் வரும் . அப்படி ஒருபுயல்தான் தனுஷ்கோடியை கடலுக்குள் கொண்டுபோனது .அதுபோன்ற பெரும் புயலும் மழையும்தான் அந்த டிசம்பரில் வந்தது. அது தனுஷ்கோடி புயலுக்கு ஒரு பத்து ஆண்டுகள் முன்பு. கல்குளம் மண்குளம் என்று இரண்டு குளங்கள் அடுத்தடுத்து இருக்கும். ஒருவாரம் விடாது பெய்த இந்த மழையில் இரண்டு குளங்களும் நிரம்பி, ஒருகுளமாகிவிட்டிருந்தது.கல்குளத்தின் பக்கசுவர்கள் படித்துறை எல்லாம் மூடி நிரம்பி விட்டது. நூர் முஹம்மது மரைக்காயரின் ஆசாரம் என்று சொல்லப்படும் வீட்டின் வாசல் படிக்கட்டுவரை தண்ணீர் வந்துவிட்டது. இருகுளங்களும்,நூர்முஹம்மது மரைக்காயரின் ஆசாரமும், குளங்களின் பின்னால் இருக்கும் மணல்மேடும் விளையாட்டுத்திடலும் , அதை ஒட்டிய வாலிபர் சங்கமும் எல்லாம் சேர்ந்து பொதுவில் குளத்துமேடு என்று அழைக்கப்பட்டது.குலத்துமேட்டின் பெரும்பகுதியை பெரிய புளியமரம் ஆக்ரமித்துக்கொண்டிருக்கும். அதுபோக நிறைய வேப்பமரங்கள் வருசையாக குளத்துமேட்டின் ஓரங்களில் இருக்கும். பெரிய அரசமரம் ஒன்றும் ஆசாரத்தை ஒட்டி கல்குளத்திற்கு அருகில் பறந்து கிடக்கும் . குலத்துமேட்டின் நான்கு பெரிய ஆலமரங்கள் மூளைக்கு ஒன்றாக விழுதுகளை பரப்பிக்கொண்டு நிற்கும் . சங்கத்தின் உள்ளே வேப்பமரங்கள் போக ஒரு பன்னீர்பூ மரமும் இருக்கும். அதன் வாசனை சில இரவுகளில் குளத்துமேடு முழுதும் மணக்கும்.
சங்கத்தை ஒட்டி ஒரு தென்னம்தோப்பு இருக்கும் .அத ஊருல குண்டுதோப்புன்னு சொல்லுவாங்க. தென்னைமரங்களான அந்த தோப்பு பள்ளம் தோண்டி சற்று ஆழத்தில் இருக்கும் .அதனால்தான் அதற்கு குண்டுத்தோப்பு என்றுபெயர். அந்த குண்டுதொப்பில் மிகப்பழமையான பெரிய பப்பரபுளி மரம் ஒன்று இருக்கும். அதன் அடிப்பகுதி, ஏலெட்டு திருமலைநாயக்கர் மகால் தூண்கள் சேர்த்தால் எத்தனை தடிமன் இருக்குமோ அந்த அளவு இருக்கும். அது ஆப்பிரிக்காவை சேர்ந்த மரம் . யாரோ வெளி நாட்டிலிருந்து கொண்டுவந்து வளர்த்திருக்கவேண்டும்.இருநூறு வருசத்து மரம் என்று சொல்வார்கள். அதற்கு ஆணைபுளியமரம் என்றபெயர் உண்டு. ஏகப்பட்ட பறவை இனங்கள் அந்த மரத்தில் கூடு கட்டும்.உள்ளூர் பறவைகளான மைனா , ஆந்தை ,குருவி ,காகம் ,போன்றவை மட்டுமல்ல, சீசனுக்கு வரும் வெளிநாட்டு பறவை இனங்களும் அதில் குடியிருக்கும் . அத்தனை இனங்களும் அந்த பப்பரபுளி மரத்தில் குடியிருக்க வசதியாக பெரிய பிரதேசமாக அந்த மரம் இருக்கும். சீசனுக்கு வரும் பறவை இனங்களில் ஒன்றுதான் இந்த பொன்னிக்குருவி. இதுவும் அந்த டிசம்பர் மழைக்காலத்தில்தான் வரும். இப்போது அது அழிந்துவரும் பறவை இனத்தில் சேர்ந்து விட்டதால் ,அதை வேட்டையாட தடை உள்ளது. அந்த காலகட்டத்தில் அதை பிடிப்பதற்கு தடை இருக்கவில்லை. அவற்றை வலைவைத்து பிடித்து தெருவில் விற்றுக்கொண்டு வருவார்கள் . சுவையான அதற்கு ஏகப்பட்ட டிமாண்ட்  இருக்கும். மூனாமூனா என்றழைக்கப்படும், முஹம்மது முகைதீன் பெரிய ஊது குழல் ஒன்றை எடுத்துக்கொண்டு குண்டுதோட்டத்துக்கு பொன்னிக்குருவி சுட புறப்பட்டுவிடுவார் . அவருடன் அவருக்கு உதவவும் ,வேடிக்கை பார்க்கவும் நவாசும் மூனாமூனாவின் மகன் வாதூதும் போவார்கள் . மூனாமூனா வீட்டில் இந்த வேட்டைக்காக முன்னேர்பாடுகள் பலநாட்களாக நடக்கும். வேட்டையில் உபயோகிக்க களிமன்உருன்டைகள் தயார்செய்வார்கள். ஊது குழலில் நுழையுமளவிற்கு அதை உருண்டையாக உருட்டி வெயிலில் காயவைப்பார்கள் . நன்றாக காய்ந்தபிறகு அவைதான் ஊதுகுழல் துப்பாக்கிக்கு தோட்டா . மூனாமூனா அந்த களிமண் குண்டை வாயில்வைத்து வேகமாக தம்காட்டி ஊதினால் சுமார் இருபத்தைந்து அடி உயர கிளையில் இருக்கும்  பொன்னிக்குருவிக்கு நிச்சயம் மௌத் தான் (மரணம்தான்). சுமார் ஆறடி இருக்கும் அந்த ஊதுகுழலில் களிமண் குண்டோடு காற்றி செலுத்தி ஊதி அவ்வளவு உயரத்தில் இருக்கும் குருவியை வீழ்த்த நுரையீரலில் மிகுந்த சக்தி வேண்டியதிருக்கும் . மூனாமூனா போன்றவர்கள் இப்போது இருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
மூனாமூனா நவாசின் குடும்பத்தின் ,குடும்ப நண்பர் . சங்குவியாபரம் செய்துவந்தார். அவர்பூர்வீகம் ராமேஸ்வரம். சங்கில் மேஜைவிளக்கு ,கைவினைபொருட்கள் செய்வதுவிற்று வந்தார் .வடநாட்டு சாமியார்கள் சங்குமாலை வாங்க வருவார்கள். வடநாட்டு செல்வந்தர்கள் வலம்புரி சங்குவாங்க வருவார்கள். அதுபோக சங்குமாலைகளும்  ,எலந்தைகொட்டை மாலைகளும் கல்கத்தாவிற்கு அனுப்பிகொண்டிருப்பார் . அருகில் எளிய குடும்பத்து பெண்கள் கொட்டை, சங்கு போன்றவற்றை மாலையாக கோர்த்துக்கொண்டிருப்பர்கள். அது ஒரு குடிசைத்தொழிலாக அந்த எளியவர்களுக்கு  உதவிக்கொண்டிருந்தது. அவருடைய அலுவலகம், கிட்டங்கி ,கடை எல்லாம் அவர் வீட்டு மாடியில்தான் . தெருவிலேயே அவர்வீட்டிலும் , மௌலானா வீட்டிலும்தான் டெலிபோன் இருக்கும்.


குளத்துமேட்டை ஒட்டி அந்த ஆரம்பப்பள்ளி இருந்தது. காமராஜர் குலக்கல்விக்கு பதிலாக ஆதாரக்கல்வி என்று மதிய உணவுடன் புதிய கல்வித்திட்டத்தை கொண்டுவந்தகாலம். பள்ளியின் ஆண்டுவிழாவிற்கு காமராஜர் வந்திருந்தார். நூர்முஹம்மது மரைக்காயரின் இல்லத்தில்தான் சிரமபரிகாரங்கள் செய்துகொண்டு இரவு உணவு உண்டார். நூர்முஹம்மது மரைக்காயர் பழைய காங்கிரஸ்காரர். ஊர்பஞ்சாயத்து தலைவராகவும் இருந்திருக்கிறார். (தொடரும்) பப்பரப்புளிமரமும் பொன்னிக்குருவியும். 2
<script>
  (function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){
  (i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
  m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
  })(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga');

  ga('create', 'UA-101258467-1', 'auto');
  ga('send', 'pageview');

</script>

Comments